அகல் விருது 2023
அறம்செய்வோம் அறக்கட்டளையின் அகல் விருது 2023
அறம்செய்வோம் அறக்கட்டளையின் அகல் விருது 2023
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திருகோணமலை அன்பின் பாதை சமூகம்
அறம் செய்வோம் அறக்கட்டளையானது கடந்த மூன்றாண்டு காலமாக இலங்கையில் உள்ள காப்பகங்கள், வலையமைப்புக்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஊடாக சிறுவர்கள், விசேட தேவையுள்ளோர் மற்றும் மூத்தோர்கள் வாழ்வை மேம்படுத்த இயன்ற சிறிய பணியாற்றிவருகிறது.
18:02:2023 காலை 9:30 மணிக்கு பொது நூலக கேட்போர் கூடத்தில் நிகழ்வு ஆரம்பமானது.
பயன்களை எதிர்பாராமல் நல்நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக சேவைகளை, சமூக வெளியில் கொண்டு செல்லாமல் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றவர்ளுடாக, கற்றுக்கொண்ட பாடங்களையும், அவர்களின் முன்மாதிரியான செயற்றிட்டங்களைப்பற்றி இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக செயற்படவேண்டும். அப்போதுதான் இளம் தலைமுறையினர் இவ்வாறான பணிகளைச் செய்ய முன்வருவார்களென சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் “விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒளியேற்ற தம் வாழ்நாளினை அர்ப்பணிக்கும் பெருமக்களை கொண்டாடி மகிழல்” என்ற தொனிப்பொருளில் அறம் செய்வோம் அறக்கட்டளையின் முதலாவது விருது – 2023 திருகோணமலை நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சண்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி விமலா நடராஜாவின் சமூக சேவைகளைப் பாராட்டியாக வேண்டும். அவர் தனி ஒரு பெண்ணாக இருந்துகொண்டு மறைமுகமாக பல்வேறுபட்ட சமூக சேவைகளைச் செய்து வருவதென்பது மிக இலகுவான விடயமல்ல. அது கடும் சவால் மிக்கதொன்றாகும். இவ்வாறான பணிகளைச் செய்து வருகின்றவர்கள் தங்களின் சேவைகள் சமூக வெளியில் கொண்டு செல்வதை எதிர்பார்ப்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை.
இவரைப்போன்ற பலர் இன்னும் மறைமுகமாக இருந்துகொண்டு செயற்பட்டு வருவார்கள். அவ்வாறானவர்களையும் அறம் செய்வோம் அறக்கட்டளை அடையாளம் கண்டு அவர்களின் நற்செயற்பாட்டினை இளம் தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களையும் இவ்வாறான சமூக செயற்பாடுகளை முன்னெடுக்க உதவி புரியவேண்டும்.
அறம் செய்வோம் அறக்கட்டளை கடந்த மூன்றாண்டு காலமாக இலங்கையிலுள்ள காப்பகங்கள், வலையமைப்புக்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஊடாக சிறுவர்கள், விசேட தேவையுள்ளோர் மற்றும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்த பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவே தங்களின் நேரகாலங்களைச் செலவிடுகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு எம்மாலான உதவிகளைச் செய்ய முன்னிப்போம் என்றார்.
இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் (திருமதி) றிஸ்வாணி றிபாஸ், சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் உள்ளிட்ட பல அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த பல ஆண்டு காலமாக, தன்னலமற்ற ஒன்றிணைந்த எண்ணிலடங்கா சமூக சேவைகளைச் செய்துவருகின்ற சண்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி விமலா நடராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி 2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.