மனமாற்றம்
இலக்கியா,கயல் இருவரும் இணைபிரியா பாடசாலை நண்பிகள் . இருவர் குடும்பமுமே நடுத்தர வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்ததால் பரஸ்பரம் உறவுகள் போலவே இருந்தார்கள். தோழிகள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வது வழக்கம். பாடசாலைக் காலத்தில் எப்படியிருந்தார்களோ அப்படியே படிப்பு முடிந்தப்பின்னும் சிறிதளவும் மாறாதிருந்தனர். தையல் பயிற்சிக்காக சேர்ந்தே வகுப்பிற்கு சென்று வந்தனர்.
சிவராத்திரி விரதகாலம் வந்துவிட்டால் திருகோணமலை நகர்பகுதி முழுவதுமே இந்திரலோக விழா போன்று அலங்கார வளைவுகளாலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும், களை கட்டும். கோணேசர் மக்களைக் காண வீதியுலா வரும் நாட்கள் மக்கள் வெள்ளமென அத்தனை வீதிகளினூடாகவும் சுற்றித்திரிவார்கள்.இக்காட்சியை திருமலை மண்ணில் தவிர வேறு எங்கும் காண முடியாது.”அடியே கயல் இன்று மனையாவெளி பக்கம் கோணேசர் வருவாராம் போவமாடி” “சரி சரி போவோம்” இலக்கியாவும்,கயலும் கடவுள் பக்தி கூடியவர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி பாடசாலையில் ஆசிரியர்களாய் கடமைப்புரியும் சமூக ஆர்வமுள்வர்கள். உரையாடலின் போது கூட கோணேசர் கோயில் வரலாறுகள், திருகோணமலை கோயில்களின் வரலாறு கன்னியா என தங்களின் சைவநெறியுடன் ஊறிய கதைகளின் உரையாடலாகவே அமையும்.
வெள்ளிகிழமைகளில் காளி கோயில் போவதும், காளிகோயில் மணல்தரையிலிருந்து அரட்டை அடிப்பதும் அலாதி பிரியம். இரு குடும்பத்தாரும் மரக்கறியையே வீட்டில் சமைத்து சாப்பிடுவதும் வழக்கம். தீருநூறு நெற்றியில் பூசாமல் இருவருமே வெளியியே இறங்க மாட்டார்கள்.
கயலின் அண்ணன் குமார் இலக்கியாவை ஒருதலையாக காதலித்தான்.கயலை காண வரும் நேரம் எல்லாம் ஓரக்கண்ணால் இலக்கியாவை ரசிக்க தவற மாட்டான். காதலை சொல்லிவிட துடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவனால் இலக்கியாவை நேரில் பார்க்கும்போது தடுமாறுவான்.
கால சுழற்சி வேகமெடுக்க இனக் கலவரத்தால் குமார் குடும்பத்துடன் கனடா போக வேண்டியதாய் போயிற்று. இலக்கியவால் கயலின் பிரிவை தாங்க முடியவில்லை.
குமார் தன்னை விரும்பியதை அவள் அறிந்தும் அவனாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.
காத்திருப்பு கடைசியில் ஏமாற்றமாகியது. கயல் இலக்கியாவை காண வந்தாள்.
“நாங்க கனடா போறம் அங்க போனதும் நீயும் வர நான் ஏதும் வழி பார்க்கிறன்”
கண்ணீருடன் கயல் விடைப்பெற்றாள்.
குமார் ஏதோ சொல்ல தடுமாறுகின்றான் என்பது இலக்கியாவுக்கு புரியாமல் இல்லை. ஆனால் காலம் கடந்து விட்டதாக அப்போது அவள் உணர்ந்தாள்.
குமார் கனடாவில் கனரக வாகன ஓட்டுனராக வேலையில் சேர்ந்தான்.
சிறிது நாட்களில் அவனுக்கு வேலை செய்யுமிடத்தில் ஒரு நண்பன் அறிமுகமானான். அவன் பெயர் ரவி. அவன் நல்ல நட்புடன் பழகி வந்தாலும் தனது மதம் பற்றியே சதா கதைத்த வண்ணம் இருப்பான். ரவி கனடா வந்த புதிதில் அவனுக்கு உதவிட யாருமற்று இருந்த வேளை விக்டர் பாஸ்டர் என்பவரின் ஊடாக வேலை வாய்ப்பு,வீடு கிடைத்தது. அதற்கு நன்றி கடனாய் இந்துவாக இருந்த ரவி மதம்மாறி பலரை தன் வலைக்குள் சிக்க வைத்தான். குமாரின் அப்பா,அம்மா சுத்த சைவம் என்பதை அறிவான். அவர்களையும் எப்படி மதம் மாற்றலாம் என்று சிந்தித்தான். குள்ளநரியாக செயல்பட தனது காரியத்தை நகர்த்தினான்.கயலை காதலித்து தனது காய் நகர்த்தலை ஆரம்பித்தான்.
“ஆன்டி எங்கட ஆலயத்திற்கு வர முடியுமாக இருந்தால் வந்து பாருங்க ” என்று கதைக்கும் போது சாடைமாடையாக ரவி உரைத்தான்.
குமாரின் அம்மாவும் ஒரு நாள் ரவியுடன் ஆலயம் சென்றாள். எங்கும் மின்குமிழி ஔிர்ந்த வண்ணம் பரந்த விசாலமான மண்டபம், கதிரைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அழகிய வார்த்தைகள் மனதிற்கு இதமாய் இருந்தது. காலம் செல்ல செல்ல குமாரின் அம்மா பத்மாவின் மனதில் மாற்றம் நிகழத் தொடங்கியது. குமார் பலமுறை எச்சரித்தும் தாய் பத்மாவில் மாற்றம் நிகழவில்லை. குமார் கயலிடம் இலக்கியாவை காதலிப்பதாகவும், தனது காதலை சொல்ல போவதாகவும் கூறினான்.
“அண்ணா இலக்கியா உங்களை விரும்பிகின்றாள். நீங்க உங்கட காதலை உடனே சொல்லுங்க”
” சரி” என ஒற்றை வார்த்தையில் தலையசைத்து சென்றான்.
தாய் பத்மா தனது ஆலயத்திற்க வரும் பெண்ணை தான் குமார் கட்ட வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தாள். தாயின் இந்த போக்கினால் நாளடைவில் குமார் வீட்டிற்கே வருவதில்லை. தந்தை ஆசையாக கட்டிய தாலி தொடக்கம் பிறந்ததில் இருந்து வைக்கப்பட்ட பொட்டு வரை இழந்தவளாய் ஆலயம் செல்ல தொடங்கியிருந்தாள். மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து தடங்கலாகவே நாட்கள் நகர்ந்தன.
கயல் திருமணம் வேண்டாம் என்று கூறியதால் ரவி தனது அடுத்த திட்டமாக புதிதாக வந்த மற்றொரு குடும்பத்தை நோக்கி தன் ஆலய மதமாற்றலில் ஈடுப்பட தொடங்கினான்.கயல் இலக்கியாவுடன் தொலைபேசியில் தாயின் மனமாற்றத்தையும் அதன் விளைவுகளையும் கூற தொடங்கினாள்.”குமார் அண்ணா வீட்ட வருவதே இல்லை.
அப்பா அம்மாவுடன் கதைப்பதே இல்லை வீடு ஏதோ ஒரு மயானம் போல இருக்கு இலக்கி நாட்டிற்கே வந்திடலாம் போல இருக்கு” தனது வேதனையை கொட்டி தீர்த்தாள்.நண்பி இலக்கியா” கயல் நம்மட ஊர் இதை விட படுமோசம் சனத்திட கஸ்டத்தை பயன்டுத்தி இதே வேலை படு வேகமாக வளருது. இவர்களால் பலர் பாதிக்கப்பட்டு்ளனர்.இதை நாம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தவது மிக கஸ்டம் எம் பண்பாடு,கலாச்சாரம் அனைத்தும் சீரழிவதை அவரவர் உணர்ந்தால் மதமாற்றங்கள் இடம் பெறுவதை தடுக்கலாம்” இருவரும் மாறி மாறி தம் ஆதங்கங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். ஊரில் திருவிழாவில் இலக்கியா அறநெறி பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து மேடை நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அங்கே கனகா டீச்சர் நின்றுக்கொண்டிருந்தார். கயலுக்கும் ,இலக்கியாவுக்கும் அறநெறி பற்றிய அறிவை ஊட்டியவர். ஊக்கப்படுத்தியவர் என்றே கூறலாம்.” டீச்சர் எப்படி சுகம்” “ஏதோ இருக்கன் இலக்கியா கயல் எப்படி இருக்காள் சுகம் கேட்டதாக கூறு” அவ நல்ல சுகமாய் இருக்கா டீச்சர்”
டீச்சருக்கு ஏதோ மன வேதனை இருக்கும் போல
“அறநெறி பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன பாழாய்போன மனமாற்றக்காரர்களால்”
டீச்சர் தனது ஆதங்கத்தை இலக்கியாவிடம கூறிக்கொணடிருந்தார்.
நாட்கள் விரைந்தோட குமார் இலக்கியாவை திருமணம் செய்வதற்காக நாட்டிற்கு வந்தான்.
தாலி அவள் ஆசைப்பட்டதை போன்றே கனடாவிலிருந்து செய்து வந்திருந்தான்.
காளி கோவிலில் மிக எளிமையாக திருமணம் நடைப்பெற்றது.
இலக்கியாவும் கனடா போனாள். அங்கே குமாரின் ஒத்துழைப்புடன் அறநெறி வகுப்புக்களை ஆரம்பித்து தமிழ் மாணவர்களுக்கு ஆசிரியராக திகழ்ந்தாள்.
“எமது மொழியை மதத்தை அழிய விடாது நாம பாதுகாக்க முயற்சியை எடுக்கனும் கயல்”
“ஆமா இலக்கியா”
குமாரின் நண்பன் ரூபன் கயலை காதலிப்பதை தெரிந்துக்கொண்ட குமார் அம்மாவின் சம்மதத்திற்காக காத்திருக்கவில்லை. அப்பாவிடம் சொல்லி திருமணத்தை கனடாவில் உள்ள நாராயண கோவிலில் நடாத்தினான்.
தாய் பத்மாவை விட்டு பிள்ளைகளும் , தந்தையும் பிரிந்த பின் பத்மா தனிமையானார்.
பெற்ற தாயாக இருந்தாலும் அவரின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினர் தம் முன்னோர் காட்டிய சீரிய வாழ்வை தமதாக்கிக் கொண்டு இன்புற வாழ்ந்தனர்.
றொசில்டா அன்டன்